அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான 4 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

Update: 2022-08-25 22:44 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி வானகரத்தில் நடந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சென்றார். அங்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது, அப்போது அ.தி.மு.க. அலுவலக கதவை உடைத்து உள்ளே சென்ற ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில், அ.தி.மு.க.வுக்கு சொந்தமான வாகனங்களின் பதிவு புத்தகங்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக புகார் செய்தார்.

அதன் மீது போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உள்பட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக பதிவான வழக்குகள் என்று மொத்தம் 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்' என்று கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பு வக்கீல் முகமது ரியாஸ் வாதாடினார். அவர் தன் வாதத்தில் ''அலுவலகத்துக்குள் புகுந்து பொருட்களை திருடி சென்றதாக கொடுத்த புகாரை பெற்று போலீசார் உடனே வழக்குப்பதிவு செய்யவில்லை. சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தவில்லை. அங்குள்ள ஆதாரங்களை சேகரிக்காமல் அழிய விட்டு விட்டனர்.

எனவே, தமிழ்நாடு போலீஸ் மீது நம்பிக்கை இல்லாததால், சி.பி.ஐ. விசாரணைக்கே மாற்ற வேண்டும்'' என்று வாதிட்டார்.

உடனடி விசாரணை

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்குகளின் புலன் விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும். விசாரணை குறித்த நிலை அறிக்கையை வருகிற செப்டம்பர் 19-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்