தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2023-10-06 08:07 GMT

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சினை, தெரு விளக்குகள் எரியாமை, பாதாள சாக்கடை திட்டம் சரிவர முடிக்காதது, குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்யாதது உள்ளிட்டவைகளை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தாம்பரம் கிழக்கு, வால்மீகி தெரு, ஏரிக்கரை தெரு சந்திப்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் டி.கே.எம்.சின்னையா, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சேலையூர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் பா.வளர்மதி கூறும்போது, "நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிவு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக சொல்லி இருக்கிறார். தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்