சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலியாக ஈரோட்டில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தினார்.;

Update:2023-02-04 02:36 IST

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலியாக ஈரோட்டில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தினார்.

கோர்ட்டு தீர்ப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. வருகிற 7-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியாக போட்டியிடுகிறது. அதன்படி எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளர் செந்தில் முருகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டார்கள்.

அவா்கள் 2 பேரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கே.எஸ்.தென்னரசு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை

இந்தநிலையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக சென்னையில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். அங்கிருந்து காரில் அவர் ஈரோட்டுக்கு வந்தார். அவர் வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

மாலை 6.50 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 8.25 மணி வரை சுமார் 1½ மணிநேரம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செம்மலை, எம்.சி.சம்பத், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், தளவாய் சுந்தரம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசுவும் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

தர்மம் வெல்லும்

இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் விவரம், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டம் நடக்கும் ஓட்டலின் வளாகத்துக்கு உள்ளே முக்கிய நிர்வாகிகளை தவிர பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரையும் அனுமதிக்கவில்லை.

கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறும்போது, "கோர்ட்டு உத்தரவின்படி 2 தலைமையும் தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொண்டர்கள் தீர்ப்பு அளிக்க உள்ளனர். எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே தர்மம் வெல்லும்", என்றார்.

பா.ஜ.க.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறும்போது, "அ.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை. கோர்ட்டு உத்தரவின்பேரில் பொதுக்குழு உறுப்பினர்கள் வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு தேர்வு செய்யப்படுவார். அவரே வெற்றியும் பெறுவார்", என்றார்.

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறுகையில், "கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக அவர் தேர்வு செய்யப்படுவார். 'மெஜாரிட்டி' எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பது நாடு அறிந்த உண்மை. கோர்ட்டு உத்தரவின்படி வேட்பாளரை தேர்வு செய்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி சமர்ப்பிப்போம். பா.ஜ.க., கூட்டணிக்கு வந்தாலும் மகிழ்ச்சி. வராவிட்டாலும் மகிழ்ச்சி", என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்