யுவராஜ் உள்பட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு
யுவராஜ் உள்பட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பில், கோகுல்ராஜ் கொலை வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண் என்ற சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள்தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள்தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் 5 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.