ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குலசேகர பெருமாள் சன்னதியை தினமும் திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-10 16:50 GMT

திருவட்டார், 

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குலசேகர பெருமாள் சன்னதியை தினமும் திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பாபிஷேகம்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் கொடிமர பிரதிஷ்டையை தொடர்ந்து திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 6 நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது. நேற்று 2-வது நாள் திருவிழா நடந்தது. காலையிலும், மாலையிலும் ஸ்ரீபூதபலி எழுந்தருளல், மதியம் ஸ்ரீபலி, இரவு பக்தி இன்னிசை ஆகியவை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்துக்கு பிறகு கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமல்லாது, பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசிக்க வந்தனர். அவர்கள் வந்த வாகனங்கள் வெகுதூரத்துக்கு நிறுத்தப்பட்டிருந்தது.

குலசேகர பெருமாள் சன்னதி

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் உள்ளே ஆதிகேசவ பெருமாள் சன்னதி, வேணுகோபாலன் சன்னதி, சாஸ்தா சன்னதி ஆகியவை உள்ளன. கோவிலின் வெளியே குலசேகர பெருமாள் சன்னதி உள்ளது. அந்த சன்னதி கும்பாபிஷேகத்துக்கு பிறகு திறக்கப்பட்டது. கும்பாபிஷேகத்துக்கு மறுநாள் குலசேகர பெருமாள் சன்னதி மாலை பூஜை நடத்தப்படமால் பூட்டியே கிடந்தது. இதனால் பக்தர்கள் வருத்தப்பட்டு, கோவிலில் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து குலசேகர பெருமாள் சன்னதி காலை, மாலை திறந்து இருக்கும் என்று இணை ஆணையர் அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று காலையிலும் குலசேகர பெருமாள் சன்னதி திறக்கப்படவில்லை. பக்தர்கள் கோவில் மேலாளரிடம் முறையிட்ட பின்னரே சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. குலசேகர பெருமாள் சன்னதியை தினமும் திறந்து, பூஜை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சன்னதி திறக்கப்படாததற்கு அர்ச்சகர்கள் குறைவாக இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. கும்பாபிஷேகம் நடந்துள்ளதால், பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதாலும் அனைத்து சன்னதிகளையும் திறந்து பூஜை நடத்த அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. மேலும் இங்கு பணியாற்றிய நாதஸ்வர கலைஞர், தவில் கலைஞர்கள் ஓய்வு பெற்ற பின்னர் இதுவரை புதிதாக இசைக்கலைஞர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது திருவிழா நடைபெறுவதால் தற்காலிக கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த பணி இடத்துக்கும் கலைஞர்களை நியமித்து கோவில் பூஜைகள் சிறப்பாக நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்