ஆதிதிராவிடர் கண்காணிப்பு குழு கூட்டம்

குடியாத்தத்தில் ஆதிதிராவிடர் கண்காணிப்பு குழு கூட்டம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்தது.;

Update:2023-07-06 23:11 IST

கண்காணிப்பு குழு கூட்டம்

குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு தாலுகா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆதிதிராவிடர் விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) இருதயராஜ், தாசில்தார்கள் விஜயகுமார், நெடுமாறன், கீதா, சந்தோஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

கூட்டத்தில் குடியாத்தம் வருவாய் கோட்ட அளவிலான ஆதிதிராவிட விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள் கே.சீதாராமன், கே.சரவணன், கே.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எளிமையாக்க வேண்டும்

கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஊராட்சிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் குடிநீர், சாலை, மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட குறைபாடுகளை சீர் செய்வது, வீடற்ற பயனாளிகளை தேர்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பது, நல வாரிய அட்டை வழங்க ஏற்பாடு செய்வது, தேவையான சாதி சான்றுகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பது. சிறுமிகள் திருமணத்தை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து தாட்கோ கடன் வழங்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. கடன் வழங்க விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஈமச்சடங்கு உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்