ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள்தாழி மூடியில் பனை ஓலை அச்சு கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள்தாழி மூடியில் பனை ஓலை அச்சு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-08-23 15:20 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழி மூடியில் பனை ஓலை அச்சு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பனை ஓலை அச்சு

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் தற்போது வித்தியாசமான முதுமக்கள் தாழி மூடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது அனைத்து முதுமக்கள் தாழிகளின் மூடிகளும் கூம்பு வடிவில் தான் இங்கே காணப்படும். ஆனால் தற்போது கிடைத்த ஒரு முதுமக்கள் தாழியின் மூடி மட்டும் தட்டை வடிவில் உள்ளது. அந்த தட்டை வடிவில் உள்ள பகுதியில் பனை ஓலைப்பாய் அச்சுகள் உள்ளது. அந்த அச்சுகள் பனை ஓலையால் ஆனதா அல்லது கோரப்பாய் என அழைக்கப்படும் கோரைப்புல்லில் நெய்யப்பட்ட பாயின் அச்சுகளா? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆய்வாளர்கள் உற்சாகம்

முதுமக்கள் தாழிகள் செய்யும் போது, அதனை காய வைப்பதற்கு இந்த பனை ஓலை பாய் அல்லது கோரைப்பாயின் மேல் வைத்திருக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னோர்கள் பனை மற்றும் பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்தியுள்ளது உறுதி ஆகி உள்ளது.

தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் பழமையான நாகரித்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்து வருவதால் தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்