நாகைக்கு கங்களாஞ்சேரி வழியாக கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் நாகைக்கு கங்களாஞ்சேரி வழியாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் நாகைக்கு கங்களாஞ்சேரி வழியாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ்களில் கூட்ட நெரிசல்
நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி, காரையூர், கொட்டாரக்குடி, உத்தமசோழபுரம், ஒக்கூர், வைப்பூர், நரிமணம், பெருஞ்சாத்தாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் நாகையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.
இந்த வழித்தடத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இயக்கப்படும் பஸ்களில் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பயணித்து வருகிறார்கள். கூட்ட நெரிசல் காரணமாக காரையூர், வைப்பூர், ஒக்கூர், கொட்டாரக்குடி ஆகிய கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பஸ்களில் இருக்கை கிடைப்பதில்லை.
கூடுதல் பஸ்கள்
இதன் காரணமாக மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். படிக்கட்டுக்கள் உடைந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வர பஸ் வசதி இல்லாத சூழலும் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகைக்கு கங்களாஞ்சேரி வழியாக கூடுதல் பஸ்களை இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.