கூடுதலாக 250 பஸ்கள் இன்று இயக்கம்

கூடுதலாக 250 பஸ்கள் இன்று இயக்கம்

Update: 2022-08-15 20:12 GMT

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இன்று கூடுதலாக 250 பஸ்கள் இயக்கப்படுகிறது என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார்.

விடுமுறை தினம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வார இறுதிநாள் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் முக்கிய நகரங்களிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுகோட்டை, மன்னார்குடி, நன்னிலம், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதே போல் கோயம்புத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களில் இருந்தும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சுதந்திர தினம் முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக திருச்சியில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக திருச்சி-சென்னை வழித்தடத்தில் 150 பஸ்களும், தஞ்சை-சென்னை வழிதடத்தில் 25 பஸ்களும் இயக்கப்பட்டன.

கூடுதலாக 250 பஸ்கள்

திருச்சி -திருப்பூர் வழித்தடத்தில் 40 பஸ்களும், திருச்சி-கோயம்புத்தூர் வழித்தடத்தில் 40 பஸ்களும், நாகப்பட்டினம்-சென்னை வழித்தடத்தில் 50 பஸ்களும், கும்பகோணம்-சென்னை வழித்தடத்தில் 50 பஸ்களும், காரைக்குடி- சென்னை வழித்தடத்தில் 25 பஸ்களும், ராமநாதபுரம் சென்னை வழித்தடத்தில் 25 பஸ்களும், புதுக்கோட்டை-சென்னை வழித்தடத்தில் 30 பஸ்களும், என மொத்தம் 435 கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்படி வழித்தடங்களில் 250 கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்