பிடிவாரண்டு உத்தரவை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜர் - ஏப்ரல் 25-ந்தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவு
கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த், நேற்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜரானார். அவரை ஏப்ரல் மாதம் 25-ந்தேதி மீண்டும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.;
'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'நோட்டா', 'ஜாம்பி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே பிரபலமடைந்தார்.
2021-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி நடிகை யாஷிகா ஆனந்த் தனது 3 நண்பர்களுடன் புதுச்சேரி சென்று விட்டு மீண்டும் சொகுசு காரில் சென்னை திரும்பினார். மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் வரும்போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்துடன் காரில் வந்த அவருடைய நெருங்கிய தோழியான ஐதராபாத்தை சேர்ந்த வள்ளிபவனி செட்டி பலியானார். யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது 2 ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் உயிர் தப்பினர்.
இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் வாய்தா கடந்த 21-ந்தேதி வந்தபோது யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று செங்கல்பட்டு கோர்ட்டில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜரானார். அப்போது விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, "கடந்த 21-ந்தேதி கோர்ட்டில் ஏன் ஆஜராகவில்லை?" என கேட்டார்.
அதற்கு யாஷிகா ஆனந்த், "எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆஜராக முடியவில்லை" என்றார். இதையடுத்து அவரை வரும் ஏப்ரல் மாதம் 25-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.