இந்தியில் பேசச்சொல்லி கடுமையாக நடந்ததாக நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு: மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன? - அதிகாரி விளக்கம்

இந்தியில் பேசச்சொல்லி கடுமையாக நடந்ததாக நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியது குறித்தும், மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.;

Update:2022-12-29 02:00 IST


இந்தியில் பேசச்சொல்லி கடுமையாக நடந்ததாக நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியது குறித்தும், மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நடிகர் சித்தார்த் புகார்

மதுரை விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், நடிகர் சித்தார்த்தின் குடும்பத்தினரிடம், இந்தியில் பேச சொல்லி கடுயைமாக நடந்து கொண்டதாகவும், காத்திருக்க வைத்ததாகவும் அவர் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில் நடந்தது என்ன? என்பது குறித்து விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். நடிகர் சித்தார்த் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார்.

அவர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சோதனை கூடத்திற்கு வந்தபோது மாலை 4.15 மணி இருக்கும். சோதனை பகுதிக்கு வந்த அவரிடம் முககசவத்தை விலக்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்பின்னர் அவரிடம் அடையாள அட்டையை காட்டுமாறு அறிவுறுத்தப்பட்டது. அவருடைய குடும்பத்தினரின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன. இது வழக்கமான நடைமுறைதான்.

இந்தியில் பேசவில்லை

நடிகர் சித்தார்த் சோதிக்கப்பட்டபோது, பாதுகாப்பு படை பெண் வீரர் தான் பணியில் இருந்தார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர். அதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெண். குடும்பத்தினரின் உடைமைகளை அடிக்கடி சோதனை செய்ததால், சித்தார்த்தும், அவருடைய குடும்பத்தினரும் கோபம் அடைந்து அந்த பெண்ணிடம் கோபித்து கொள்ளும் வகையில் நடந்து கொண்டனர். இருப்பினும் அந்த பெண், எந்தவித தயக்கமும் இன்றி, அமைதியான முறையில் தன்பணியை செய்து அவர்களுக்கு பதிலளித்தார். அந்த பெண் தமிழில் தான் பேசினார். இந்தியில் பேசவில்லை.

இதற்கிடையே சோதனை பணிக்கான பொறுப்பு அதிகாரி சோதனை அறைக்கு வந்தார். அவர் தெலுங்கு பேசுபவர். அவரும் சித்தார்த்துடன் பேசி எதற்காக அடிக்கடி பரிசோதனை செய்யப்படுகிறது என்பதை விளக்கினார். சரியாக 10 நிமிடத்துக்குள் அங்கிருந்து கோபித்து கொண்டு, நடிகர் சித்தார்த் விமானம் ஏறும் இடத்திற்கு சென்றுவிட்டார். அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால், அவருடன் வந்தவர்கள்தான் அவ்வப்போது இந்தியில் பேசினார்கள்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் இந்தியில் பேசி, அவரிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. நீண்ட நேரம் அவரை காத்திருக்கவும் வைக்கவில்லை. அவர் எழுப்பி உள்ள குற்றச்சாட்டு தவறானது. விமான நிலையத்திற்குள் வந்த நேரத்தில் இருந்து, அவர் விமானத்தில் புறப்பட்டு செல்லும் வரை உள்ள அனைத்து காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது ஒரு புறம் இருக்க, வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதையை மத்திய பாதுகாப்பு படையினர் வழங்காத காரணத்தால் நடிகர் சித்தார்த் இதுபோன்று நடந்து கொண்டதாக விமான நிலைய ஊழியர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

அதே நேரத்தில் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்தும், இந்தியில் பேசச்சொல்லி கடுமையாக நடந்து கொண்டது உண்மைதானா என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை எம்,.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்