ஊட்டியில், தியேட்டரில் நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படம் வெளியாகாததால் ரசிகர்கள் கொந்தளிப்பு

ஊட்டியில், தியேட்டரில் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்' படம் வெளியாகாததால் ரசிகர்கள் கொந்தளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-08-11 00:15 IST

தியேட்டரின் முன்பு ரசிகர்கள் திரண்டு நின்று இருந்த காட்சி.

ஊட்டி: ஊட்டியில், தியேட்டரில் நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படம் வெளியாகாததால் ரசிகர்கள் கொந்தளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

'ஜெயிலர்' திரைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியிடப்பட்டது. இதையொட்டி காலை 5 மணி சிறப்பு காட்சிகளை காண்பதற்காக ரஜினி ரசிகர்கள் தீவிர ஆர்வம் காட்டினர். இதேபோல் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கணபதி தியேட்டரில் ஜெயிலர் படம் வெளியிடுவதையொட்டி தியேட்டர் முன்பாக ரசிகர்கள் காலை முதல் குவிந்து ஆர்வமாக காத்து இருந்தனர். இதற்காக ஏற்கனவே தியேட்டர் நுழைவு வாயிலில் ரஜினிகாந்தின் படம் இருந்த பேனர் மற்றும் தோரணம் கட்டி ரசிகர்கள் அமர்களப்படுத்தி இருந்தனர். ஊட்டியில் பொதுவாக அதிகாலை காட்சிகள் வெளியிடப்படாது என்பதால் மதியம் வரை காத்திருந்தும் தியேட்டரில் படம் வெளியிடப்படவில்லை. மேலும் தியேட்டரில் டிக்கெட் வினியோகம் உள்ளிட்ட எந்த பணிகளும் நடக்கவில்லை.

உரிமம் புதுப்பிப்பு

விசாரித்ததில் தியேட்டரின் இந்தாண்டுக்கான உரிமத்தை தற்போது வரை புதுப்பிக்காததால், ஜெயிலர் படம் வெளியிட வாய்ப்பு இல்லை என்று தியேட்டர் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இதனால் கொந்தளித்த நூற்றுக்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகத்தினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பெயரில் ஊட்டி மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரசிகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து போக செய்தனர்.

கருப்பு நாள்

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் குமார் கூறுகையில், தமிழகத்தில் எல்லா இடத்திலும் நடிகர் ரஜினிகாந்தின் படம் வெளியிடப்பட்ட நிலையில் ஊட்டியில் மட்டும் படம் வெளியிடப்படாதது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது காலை முதல் வேலைக்கு கூட செல்லாமல் விடுமுறை எடுத்து படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். படம் வெளியிடப்படாததால் இன்றைய(நேற்று) தினம் எங்களுக்கு கருப்பு நாளாகும். நாளை(இன்று) படம் வெளியிடப்படும் என்று தியேட்டர் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். அவ்வாறு வெளியிடப்படாவிட்டால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன் என்றார்.

இதுகுறித்து தியேட்டர் நிர்வாகத்தினர் கூறுகையில், இந்த ஆண்டுக்கான தியேட்டர் உரிமம் கடந்த வாரத்துடன் முடிந்தது. இதற்காக விண்ணப்பித்து இன்று(நேற்று) பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உரிமம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் தாமதமாகியுள்ளது. படம் வெளியிடுவது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் விநியோகஸ்தர் சார்பில் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் கொடுக்கவில்லை. உரிமம் புதுப்பிக்கப்பட்டவுடன் படம் வெளியிடப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்