தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Update: 2023-06-19 06:26 GMT

ஈரோடு,

ஈரோட்டில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டாஸ்மாக் மூலம் அரசுக்கு அதிக வருமானம் வரவேண்டி இலக்கு நிர்ணயிப்பதில்லை. டாஸ்மாக்கில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து சரி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி பிரச்சினைகள் தீர்க்கப்படும். எங்கோ ஓரிரு இடங்களில் தெரியாமல் நடந்துள்ள சிறிய பிரச்சினைகளை கூட அரசியல் காரணங்களுக்காக பூதாகரமாக்கி கூறி வருகின்றனர்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 800 குளங்களுக்கு தண்ணீர் நிரப்பும் சோதனை முடிவடைந்துள்ளது. இந்த திட்டத்தில் முழுமையாக நிலத்தைக் கையகப்படுத்தாமல் அ.தி.மு.க. அரசு விட்டுச் சென்றுவிட்டது. அதை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளிடம் பேசி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

சில இடங்களில் பைப்புகள் மற்றும் தண்ணீர் அளவிடும் கருவி திருட்டுப்போய் உள்ளது. பணிகள் முடிவடைந்ததும், காவலர்கள் நியமிக்கப்பட்டு, அத்தகைய திருட்டுகள் நடைபெறாமல் தடுக்கப்படும். அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்