பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் பள்ளி மாணவி புகார் மனு அளித்தார்.

Update: 2023-04-19 17:23 GMT

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். சமூகநீதி மற்றும் உரிமைகள்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு இருதயராஜன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை சத்தியபாமா என்பவர் அளித்த மனுவில், நான் பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவானம் பகுதியில் விவசாய நிலம் வாங்குவதற்காக ரூ.3 லட்சத்தை முன்பணமாக அந்த நிலத்தின் உரிமையாளரிடம் கொடுத்தேன். அதன்பின்னர் அந்த நிலத்தில் வில்லங்கம் இருப்பதால் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திரும்ப தராமல் கால தாமதம் செய்து வருகிறார். அவரிடமிருந்து எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

வாலிபரை கைது செய்ய...

அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி அளித்த மனுவில், அணைக்கட்டு தாலுகா மேல்பள்ளிப்பட்டியை சேர்ந்த தாமரைக்கனி (வயது 26) என்பவருடன் கடந்த 2021-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் சில நாட்களில் காதலாக மாறியது. அப்போது அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை எனது பெற்றோர் அறிந்து அவரிடம் கேட்டனர். அப்போது ஊர் பொதுமக்கள் மத்தியில் வைத்து 18 வயது நிரம்பியவுடன் என்னை திருமணம் செய்து கொள்வதாக தாமரைக்கனி கூறினார்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். இதுகுறித்து தாமரைக்கனியிடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்காமல் மிரட்டல் விடுத்தான். இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் தாமரைக்கனி மற்றும் அவனின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. தாமரைக்கனியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கோர்ட்டில் வழக்கு தொடருங்கள்

காட்பாடி காசிக்குட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயா என்பவர் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தக்கோரி குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தோம். கோபுரம் அமைக்க வேண்டாம் என்று கூறி போராட்டம் செய்த பொதுமக்களை விருதம்பட்டு போலீசார் தகாத வார்த்தைகளால் பேசி லத்தியால் தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரித்த பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறுகையில், பணம், கொடுக்கல் வாங்கல் மற்றும் ஏலச்சீட்டு போன்ற பிரச்சினையில் போலீசார் கட்ட பஞ்சாயத்து செய்யக் கூடாது. கோர்ட்டில் வழக்கு தொடருங்கள். செல்போன் கோபுரம் அமைக்க முறையாக அனுமதி வாங்கியிருந்தால் போலீசார் அதனை தடுத்து நிறுத்த முடியாது. மேல்பள்ளிபட்டியை சேர்ந்த தாமரைக்கனியின் செல்போன் எண்ணின் மூலம் அவரை பிடிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்