ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Update: 2022-07-08 09:08 GMT

பழைய மாமல்லபுரம் சாலை காரப்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி. அந்த பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், மேட்டுக்குப்பம், துரைப்பாக்கம், மேடவாக்கம் என சுற்றுவட்டார பகுதியில் இருப்பவர்கள் ஜோதியிடம் ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என 67 பேர் ஏலச்சீட்டு போட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜோதி, அவரது கணவர் பசுபதி அவர்களுடைய மகன் பிரபு, மருமகள் சத்தியா ஆகியோர் ஒரு ஆண்டுக்கு முன்பு காரப்பாக்கத்தில் உள்ள சொந்த வீட்டை விட்டுவிட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஏலச்சீட்டு செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். கொரோனா தொற்று காலத்தில் கூட சீட்டு பணத்தை விடாப்பிடியாக கேட்டு பெற்றனர். சீட்டு முடிவடையும் நிலையில் ஜோதி, அவரது கணவர் பசுபதி, மகன் பிரபு, மருமகள் சத்தியா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கண்டுபிடித்து தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் ஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கோர்ட்டில் தாங்கள் 67 நபர்களிடம் கடன் பெற்றதாகவும் திருப்பி தர முடியாத சூழலில் இருப்பதாகவும், நொடிந்தோர் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும் கணவரின் மருத்துவ செலவுக்காக கடனாக பெற்றதாக நோட்டீஸ் மூலம் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாதம் முழுவதும் வேலை செய்து கிடைக்கும் வருமானத்தை ஜோதியிடம் ஏலச்சீட்டுக்கு செலுத்தி சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றிக்கொண்டு தலைமறைவானது மட்டுமல்லாமல் தங்களிடம் கடனாக பெற்றதாக நோட்டீஸ் அனுப்பியது பாதிக்கப்பட்டவர்களை வேதனைக்குள்ளாக்கியதாக கண்ணீர் மல்க கூறினர். மேலும் ஜோதி குடும்பத்தினரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுடைய பணத்தை மீட்டு தரும்படியும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்