தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் வாலிபர் மனு அளித்தார்.

Update: 2023-10-09 17:59 GMT

மக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலசுப்ரமணியன், உதவி ஆணையர் (கலால்) ஜோதிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா, கடனுதவி உள்ளிட்டவை தொடர்பாக 432 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

செல்போன் கோபுரம் அமைக்க கூடாது

திருப்பத்தூர் பாரதி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், திருப்பத்தூர் பாரதி நகர், வள்ளுவர் நகர், சாமியார் கொட்டாய், தங்கராஜ் நகர் ஆகிய பகுதிகளுக்கு நடுவே தனியார் செல்போன் கோபுரம் உள்ளது. இந்தநிலையில் இந்த பகுதியில் மேலும் ஒரு செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி நடைபெறுகிறது.

ஏற்கனவே உள்ள செல்போன் கோபுரத்தால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இங்கு புதிதாக செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என கூறியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்ட தென்னை நார் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் அளித்துள்ள மனுவில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வால் கடந்த சில மாதங்களில் பல குறு, சிறு தொழில்கள் முடங்கி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என கூறியிருந்தனர்.

டாக்டர் மீது நடவடிக்கை

திருப்பத்தூர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் பன்னீர்செல்வம் (வயது 20) அளித்துள்ள மனுவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மிட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றேன். அங்கு எனக்கு ஊசி செலுத்தினர். அதன்பிறகு எனது ஒரு கால் செயல்படவில்லை. எனவே எனக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

வாணியம்பாடியை சேர்ந்த திருநங்கைகள் 20-க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள மனுவில், நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வாடகை கொடுப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்