அதிக விலைக்கு பால் விற்றால் நடவடிக்கை

பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளதை விட அதிக விலைக்கு பால் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2023-09-08 22:00 GMT

ஊட்டி

பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளதை விட அதிக விலைக்கு பால் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

காலாண்டு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுக்கான காலாண்டு கூட்டம் குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நுகர்வோர் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர். இதேபோல் சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு வரும் வெளிமாநில, மாவட்ட நுகர்வோர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில் குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஸ்குமார் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பால் விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் கடைகளில் பால் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டு உள்ள விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அனைத்து பொட்டலமிடப்பட்ட பொருட்களிலும் விதிகளின்படி குறிப்பிடப்பட வேண்டிய விவரங்களை குறிப்பிடாமல் விற்பனை செய்யக்கூடாது.

நடவடிக்கை

பொட்டலப் பொருட்களின் எடையை நுகர்வோர் சரிபார்க்கும் வகையில் எடைக் கருவிகள் வைத்திருக்க வேண்டும். பொருட்களை எடையிடும் போது தராசுகளை நுகர்வோர் பார்வையில் படும் விதமாக வைக்க வேண்டும். அனைத்து வகையான எடைக்கருவிகளும் காலமுறைப்படி முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். அதே சமயத்தில் பொருட்கள் வாங்கும் போதும், திருப்பி கொடுக்கும் போதும் நுகர்வோர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விற்பனையாளர்கள் சரியான முறையில் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த சட்ட விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவுகள் சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்