தீபாவளி சீட்டு என்ற பெயரில் பட்டாசுகளை பதுக்கி வைத்தால் நடவடிக்கை

தீபாவளி சீட்டு என்ற பெயரில் பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2023-10-12 17:04 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி

குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பணியாளர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்ட பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர் என்.சபீனா தலைமை தாங்கினார்.

குடியாத்தம் தீப்பட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை மாவட்ட தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் சாந்தினிபிரபா வரவேற்றார். குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பாதுகாப்பு வழிமுறை

கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது தீப்பெட்டி மற்றும் பட்டாசு பாதுகாப்பு சம்பந்தமாக பட விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தீவிபத்துக்களை தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

வேலூர் மாவட்ட தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் என்.உமாபாரதி தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை பட விளக்கங்களுடன் நடத்தினார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் சித்ராதேவி, நகராட்சி ஆணையாளர் எம்.மங்கையர்க்கரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை உள்பட தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது-

நடவடிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு விபத்தில் ஏராளமானோர் பலியானதை தொடர்ந்து பட்டாசுகள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. தீபாவளி சமயங்களில் பட்டாசு சீட்டு என்ற பெயரில் வேலூர் மாவட்டத்தில் சீட்டு நடத்தி சட்டவிரோதமாக பட்டாசுகளை வீடுகளில் பதுக்கி வைப்பதாக தகவல்கள் வந்துள்ளது. அது போல் யாராவது தீபாவளி சீட்டு நடத்தி பட்டாசுகளை பதுக்கி வைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்