கழிவுநீர் அகற்றும் வாகனங்களை உரிமம் இன்றி இயக்கினால் நடவடிக்கை
மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் வாகனங்களை உாிமம் இன்றி இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் பரந்தாமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மலக்கசடு மற்றும் கழிவு வேளாண்மை தேசிய கொள்கையின் அடிப்படையில் கழிவுகளை அகற்ற விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது, மலக்கசடு மற்றும் கழிவுநீரை வாகனங்கள் மூலம் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022-ம் ஆண்டின் சட்ட திருத்தத்தின் அடிப்படையில் கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பயன்படுத்தும் வாகனங்களை உரிமம் இன்றி இயக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்று உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை மேல்விஷாரம் நகராட்சி ஆணையாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.