உரிமம் பெறாமல் விடுதி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் விடுதி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை சார்பில் தமிழ்நாடு சிறார், மகளிர்களுக்கான இல்லங்கள், விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம்-2014 குறித்து பள்ளி, கல்லூரி தாளாளர்கள், முதல்வர்கள், விடுதிகள் மற்றும் இல்லங்கள் நடத்தும் உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- தனியார் இல்லங்கள் மற்றும் விடுதிகளின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி தாளாளர்கள், முதல்வர்கள், விடுதிகள் மற்றும் இல்லங்கள் நடத்தும் உரிமையாளர்கள் உடனடியாக உரிய உரிமம் பெறவேண்டும். மேலும் .விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.
நடவடிக்கை
விடுதிகள் மற்றும் இல்லங்கள் பதிவு செய்யவும், உரிமம் பெறவும் தமிழ்நாடு சிறார், மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் முறைப்படுத்துதல் சட்ட விதிகள் 2015-ல் காணப்படும் படிவம் -1 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை மாவட்ட இணையதளத்தில் https://kallakurichi.nic.in பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். உரிமம் பெறாமல் இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெற மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும், தொலைபேசி எண் (04151-295098), dswokallakurichi@gmail.com மற்றும் dcpukkr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட சமூக நலன், மகளிர் உரிமைகள் துறை அலுவலர் தீபிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் இளையராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், இல்லங்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.