தொழிலாளர் தினத்தன்று பணிபுரிந்தவர்களுக்கு மாற்று விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று பணிபுரிந்த பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-05-02 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று பணிபுரிந்த பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆய்வு

சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவின் படி, கோவை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் ஈரோடு தொழிலாளர் இணை ஆணையர் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் குன்னூர், தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) சங்கர் தலைமையில் தொழிலாளர்த்துறை அலுவலர்கள் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர். ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் கடந்த 1-ந் தேதி மே தினத்தன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்படி நீலகிரி மாவட்டம் முழுவதும் 22 கடைகள், 26 உணவு நிறுவனங்கள், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 53 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

நிறுவனங்கள் மீது நடவடிக்கை

இதில் மே தினத்தன்று பணிபுரிந்த பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ முறையாக வழங்காமல் பணிக்கு அமர்த்திய 29 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. இதேபோல் 31 தோட்ட நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் 8 தோட்ட நிறுவனங்கள் விதி மீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகைகள் விடுமுறைகள்) சட்டம், 1957-ம் ஆண்டு உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இது போன்று தொடர் நடவடிக்கைகள் அடிக்கடி நடத்தப்படும் என்றும், ஆய்வின் போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்