142 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
142 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 12,890 பேர் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து கடந்த 2020-ம் ஆண்டு 40 பேர், 2021-ம் ஆண்டு 85 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 9 மாதங்களில் 142 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா விற்ற 170 பேர் மீதும், நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி 1,027 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிணையத்தை மீறிய 23 ரவுடிகள் உள்பட 42 பேர் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவரால் சிறை தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகையிலை பொருட்கள் விற்ற 651 பேர் மீதும், லாட்டரி சீட்டுகள் விற்ற 90 பேர் மீதும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 113 பேர் மீதும், மது விற்ற 1,124 பேர் மீதும், பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 9,857 பேர் மீதும் உரிய சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.