விடுமுறை அளிக்காத 142 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 142 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-10-02 19:15 GMT


கோவை


கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 142 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.


கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


அதிகாரிகள் ஆய்வு


சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின் பேரில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி அறிவுறுத்தலின்படி, தொழிலாளர் இணை ஆணையர் வி.லீலாவதி வழிகாட்டுதலின்படி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் காந்தி ஜெயந்தி விடுமுறை நாளில் கோவை மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதா என்று ஆய்வு நடத்தினர்.


காந்திஜெயந்தி தேசிய விடுமுறை தினம் என்பதால் அன்று தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு உள்ளதா? அன்றைய தேதியில் தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தால் அதற்கு உரிய படிவம் வழங்கப்பட்டு உள்ளதா?, அவை தொழில் நிறுவனத்தின் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டு உள்ளதா? என்பத குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.


142 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


அந்த வகையில் மொத்தம் 170 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில் காந்தி ஜெயந்தி அன்று தொழிலாளர்களுக்கு விடு முறை அளிக்காமல், சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு உரிய படிவத்தில் முன்னறிவிப்பு அளிக்காமல் தொழிலாளர்களை பணிபுரிய அனும தித்த 62 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 75 உணவு நிறுவனங்கள், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட 142 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


தவறு செய்த நிறுவனங்களுக்கு தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து குறைந்த பட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஆய்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் அடுத்த மாதம் ஆய்வு செய்யப்பட்டு உரிய மாற்று விடுப்போ அல்லது இரட்டிப்பு ஊதியமோ வழங்கப்பட்டு உள்ளதா என்று மீண்டும் ஆய்வு செய்து முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்