வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்-மனைவி விடுவிப்பு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி உள்பட 3 பேரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-07-20 18:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி உள்பட 3 பேரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சொத்து குவிப்பு வழக்கு

கடந்த சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வருவாய்த்துறை அமைச்சராக சாத்தூர் ராமச்சந்திரன் பொறுப்பு வகித்து வருகிறார்.

இவர் கடந்த 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சுகாதாரம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அவரும், அவருடைய மனைவி ஆதிலட்சுமி, தொழில் அதிபர் சண்முக மூர்த்தி ஆகிய 3 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 11 ஆண்டாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்ககோரி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் ஏற்கனவே கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

விடுவிப்பு

இந்த வழக்கு விசாரணைக்காக பலமுறை கோர்ட்டில் அவர் ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் நேற்று தீர்ப்பு கூறினார்.

சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லாததால் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி ஆதிலட்சுமி, சண்முகமூர்த்தி ஆகிய 3 பேரையும் விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

வழக்கு கடந்து வந்த விவரம்

கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை வருமானத்தை விட அதிகமாக ரூ.44 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டது. இ்ந்த வழக்கில் அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் விருதுநகரை சேர்ந்த தொழில் அதிபர் சண்முக மூர்த்தி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 36 சொத்துக்களை விற்றுள்ளதாகவும், அமைச்சராக இருந்தபோது 9 சொத்துக்களை விற்றுள்ளதாகவும், வேறு எந்த சொத்துக்களும் வாங்காத நிலையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் தரப்பில் இந்த வழக்கில் வாதிடப்பட்டது.

மேலும் சாத்தூர் ராமச்சந்திரனின் வருமானம் தொடர்பாக தாக்கல் செய்த கணக்கை வருமானவரி துறையினர் ஏற்றுள்ளனர். ஆனால், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்று கொள்ளாத நிலையில் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்