நிர்வாக சீர்கேட்டால் வளர்ச்சி பாதையில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
மோசமான நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் வளர்ச்சி பாதையில் பின்னோக்கி செல்கிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார்.;
மோசமான நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் வளர்ச்சி பாதையில் பின்னோக்கி செல்கிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
இது குறித்து அவர் மதுரையில் கூறியதாவது:-
கடன் சுமை
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க.அரசு ரத்து செய்து விட்டது. சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். 5 பவுன் நகை அடமானம் வைத்தால் திருப்பி தருவோம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது தகுதி உள்ளவர்களுக்கு வழங்குவோம் என்று கூறுகிறார்கள். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கள்ளச்சாரய சாவு அதிகரித்தது போல் கருணாநிதி ஆட்சி காலத்தில் கள்ளச்சாராய சாவு அதிகரித்து இருந்தது. கள்ளச்சாராயத்தால் தி.மு.க. ஆட்சியில் கடந்த 2006-ம் ஆண்டில் 126 பேரும், 2007-ம் ஆண்டில் 135 பேரும், 2008-ம் ஆண்டில் 101 பேரும், 2009 ஆண்டில் 149 பேரும், 2010-ம் ஆண்டில் 185 பேரும் இறந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு குட்டிச்சுவர் ஆகி விட்டது. நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ஆகியவை ரத்து செய்யவில்லை. இதனால் மாணவர்கள் தி.மு.க. மீது கடும் கோபத்தில் உள்ளனர். இன்றைக்கு கடன் சுமை தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிற புள்ளி விவர தகவல்கள் நமக்கு அதிர்ச்சியை காட்டுகிறது.அதாவது கடன் வாங்குவதில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.87 ஆயிரத்து 977 கோடியும், 2022-ம் ஆண்டில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடியும் கடன் வாங்கி உள்ளனர். அதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் ரத்து செய்து விட்ட தி.மு.க. எதற்காக இவ்வளவு தொகையை கடன் வாங்கி இருக்கிறது என்பது புரியவில்லை.
வரி உயர்வு
ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது தமிழகம் வளர்ச்சி பாதையில் வீறு நடைபோட்டு கொண்டு இருந்தது. ஆனால் மு.க.ஸ்டாலினின் நிர்வாக சீர்கேட்டால், தமிழகம் தற்போது வளர்ச்சி பாதையில் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்துவதற்கும், மதுரையில் கருணாநிதி நூலகத்தை ரூ.114 கோடியில் கட்ட ஆர்வம் காட்டும் தி.மு.க. அரசு, இன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கும்பாபிஷேகம் செய்வதற்கும், வசந்த ராயர் மண்டபத்தை புதுப்பிப்பதற்கும் அக்கறை காட்டாதது ஏன் என்று மக்கள் கேள்வி கேட்கின்றானர். கடந்த 2 ஆண்டுகளில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, 9 மாத இடைவெளியில் 50 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கும் வகையில் மீண்டும் மின் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.