காங்கயம்
ஊதியூர் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
கார் மீது மோதல்
தென்காசி மாவட்டம் தேவிபட்டினம் காமராஜர் வீதியை சேர்ந்த ராஜகோபால் மகன் திருமுருகன் (வயது22). மதுரை மாவட்டம் சிலைமான் அம்மன் கோவில் வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தெய்வமணி (24). இவர்கள் இருவரும் காங்கயம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் நேற்று மாலை தாராபுரத்தில் இருந்து காங்கயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளை தெய்வமணி ஓட்டிவந்துள்ளார். திருமுருகன் பின்னால் அமர்ந்து இருந்தார். தாராபுரம் - காங்கயம் சாலை இச்சிப்பட்டி அருகே வந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
வாலிபர் பலி
இந்த விபத்தில் திருமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் இருந்த தெய்வமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.