குறுகிய சாலையால் அதிகரிக்கும் விபத்துகள்
நெகமம்-வீதம்பட்டி இடையே குறுகிய சாலையால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதனால் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
நெகமத்தில் இருந்து பெரியபட்டி செல்லும் ரோட்டில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த வழித்தடத்தில், திருப்பூரில் இருந்து பெரியபட்டி வரை ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரியபட்டியில் இருந்து வீதம்பட்டி வரையும் ரோட்டை அகலப்படுத்தி உள்ளனர். ஆனால் வீதம்பட்டியில் இருந்து நெகமம் வரை ரோடு அகலப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
இந்த வழியில் சின்ன நெகமம், சந்திராபுரம், உதவிபாளையம், அய்யம்புதூர், மூங்கில்தொழுவு, வேலூர், வீதம்பட்டி என பல்வேறு பகுதிகள் உள்ளன.
இந்த சாலையில் தென்னைநார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளது. இங்கிருந்து அதிக அளவு தென்னை சம்பந்தப்பட்ட பொருட்கள் திருப்பூர், காங்கயம், உடுமலை, பல்லடம், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. தேங்காய் , காய்கள் என பல்வேறு வகையான விளை பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும், பள்ளி கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் என பலர் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
இந்த ரோட்டில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து அபாயம் அதிக அளவில் உள்ளது. எனவே, இந்த ரோட்டை விரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.