நாங்குநேரி-பேட்டை அருகே விபத்து: என்ஜினீயர் உள்பட 3 பேர் பலி
நாங்குநேரி, பேட்டை அருகே நடந்த விபத்துக்களில் என்ஜினீயர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
நாங்குநேரி:
நாங்குநேரி, பேட்டை அருகே நடந்த விபத்துக்களில் என்ஜினீயர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
உறவினர்கள்
நெல்லை மாவட்டம் களக்காடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜீவானந்தம் மகன் மந்திரமூர்த்தி (வயது 34), ஆட்டோ டிரைவர்.
களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் ரகுவரன் (26), என்ஜினீயர். இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவார்கள்.
மந்திரமூர்த்திக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்காக 2 பேரும் நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டனர்.
மின்கம்பத்தில் மோதியது
மோட்டார் சைக்கிளை ரகுவரன் ஓட்டினார். பின்னால் மந்திரமூர்த்தி அமர்ந்து இருந்தார். நாங்குநேரியில் இருந்து நெல்லை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது, நாங்குநேரி தனியார் நூற்பாலை அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.
2 பேர் பலி
இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட மந்திரமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ரகுவரன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ரகுவரனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரகுவரனும் பரிதாபமாக இறந்தார். பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு விபத்து
நெல்லையை அடுத்த பழைய பேட்டை அனவரதசுந்தர விநாயகர் கோவில் தெருைவச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 60). விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டம், அபிஷேகபட்டியில் உள்ளது. இவர் நேற்று தனது தோட்டத்துக்கு காரில் சென்றார். பின்னர் மதியம் அங்கிருந்து தனது வீட்டுக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகில் சென்றபோது, நெல்லையில் இருந்து சுரண்டைக்கு சென்ற அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற வேல்முருகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து சென்று, இறந்த வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.