விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-10-21 18:45 GMT


விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை அணைப்பது என்ற கருத்தின் அடிப்படையில் பள்ளி- கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தீயணைப்புத்துறையினர் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர், நிலைய அலுவலர் வேல்முருகன், நிலைய அலுவலர் (போக்குவரத்து) பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு நிலைய அலுவலர் ராஜவேல், முன்னணி தீயணைப்பாளர் ஷாஜகான் உள்ளிட்ட தீயணைப்புத்துறையினரும் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளும் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். இப்பேரணியானது விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தொடங்கி நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம் வழியாக சென்று அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.

செஞ்சி

செஞ்சியில் ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கணபதி தலைமை தாங்கினார். பசுமை திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். செஞ்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் சசுபதி, மூத்த தீயணைப்பு வீரர் சிவகுருநாதன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல் விளக்கம் அளித்தனர். மேலும் பட்டாசுகள் எவ்வாறு பாதுகாப்பாக வெடிப்பது என்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

தீபாவளி பண்டிகையை விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியாக கொண்டாடுமாறும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பசுமை பட்டாசுகளை வெடிக்குமாறும் உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழக அரசு அறிவித்துள்ள கால அளவான காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட அலுவலக பொறியாளர்கள் கார்த்திக், சங்கவி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பிரசார வாகனம் மூலம் விழுப்புரம் நகரம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்தும், பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்