மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தந்தை-மகன் பலி

தாராபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை-மகன் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.;

Update:2023-10-07 22:52 IST

தாராபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை-மகன் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தந்தை-மகன்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 61). இவரது மகன் கருப்புசாமி (41). இவர்கள் இருவரும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அறையில் (பிணவறையில்) கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் இருவரும் பணியை முடித்துவிட்டு நேற்று காலையில் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார்சைக்கிளை கருப்புசாமி ஓட்டிச்சென்றார். பின்னால் கோவிந்தசாமி அமர்ந்திருந்தார்.

லாரி மோதி பலி

அவர்கள் திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் பூளவாடி பிரிவு பகுதியில் மோட்டார்சைக்கிளில் சாலையை கடக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கருப்புசாமி மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் விபத்தை பார்த்ததும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தந்தை, மகன் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்தனர். இதில் அவர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு இருவர் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதிய விபத்தில் தந்தை-மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்