ஆத்தூர் அருகே மின்கம்பத்தில் கார் மோதி ஆடிட்டர் பலி-3 பேர் காயம்
ஆத்தூர் அருகே மின்கம்பத்தில் கார் மோதி ஆடிட்டர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.
ஆத்தூர்:
ஆடிட்டர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாடார் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராம்ஜி (வயது 56). ஆடிட்டர். திருமணமாகவில்லை. இவருடைய நண்பர் திருச்செங்கோடு சாணார்பாளையத்தை சேர்ந்த சண்முகவேலு (55). இந்த நிலையில் சண்முகவேலுவுக்கு இதய பிரச்சினை ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்றனர்.
பின்னர் அங்கு சிகிச்சையை முடித்து விட்டு காரில் திருச்செங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரில் சண்முகவேலின் மகன் கிரிவரதன் (21), டிரைவர் கணபதி ஆகிய 4 பேர் வந்தனர். காரை சண்முகவேலு ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
சாவு
இந்த நிலையில் கார் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கருத்த ராஜா பாளையத்தில் உள்ள அரவை ஆலை பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆடிட்டர் ராம்ஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த சண்முகவேலு, கணபதி, கிரிவரதன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.