நாமகிரிப்பேட்டை அருகேசரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்

Update: 2023-01-23 18:45 GMT

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

சரக்கு ஆட்டோ

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள உரம்பு குட்டைக்காடு பகுதியை சேர்ந்த 15 பெண்கள் வெங்காயம் அறுவடை பணிக்காக சரக்கு ஆட்டோவில் நாமகிரிப்பேட்டை அருகே கோரையாறு பகுதிக்கு நேற்று காலை 9 மணி அளவில் புறப்பட்டனர். சரக்கு ஆட்டோவை மேற்கு கோம்பை கொட்டாய் பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் (வயது 37) என்பவர் ஓட்டி சென்றார்.

இந்த நிலையில் மூலப்பள்ளிபட்டி அருகே ராசிபுரம்- ஆத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ரைஸ் மில் அருகே சரக்கு ஆட்டோ சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு ஆட்டோவில் சென்ற 15 பெண்கள் மற்றும் டிரைவர் என 16 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

16 பேர் படுகாயம்

அங்கு ஐதா தேவி (27), சுமதி (42), அமுதா (48), நாகலட்சுமி (40), அம்பிகா (35), பிரியா (34), லாவண்யா (18), சத்யா (24,) பழனியம்மாள் (50), மல்லிகா (40), ஜீவா (30), மினித்ரா (25), சுப்பம்மாள் (60), காளியம்மாள் (36), பிரியா (14) ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் ஐதாதேவி, அமுதா, நாகலட்சுமி, அம்பிகா, பிரியா, லாவண்யா, மினித்ரா, சத்யா ஆகிய 8 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் பாலச்சந்தர் ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கலெக்டர், எம்.பி. ஆறுதல்

விபத்தில் காயம் அடைந்தவர்களை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் ராசிபுரம் நகர தி.மு.க. செயலாளர் சங்கர் வந்திருந்தார். மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கலெக்டர் கேட்டு கொண்டார்.

இதற்கிடையே காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. விபத்து தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்