எருமப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி கர்ணன் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்(வயது 62). அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் பொன்னேரியில் டீ குடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
எருமப்பட்டி அருகே கன்னிமார் கோவில் வளைவு அருகே வந்த போது சிவசுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சிவசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எருமைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.