தொப்பூர் கணவாயில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி-உறவினர் படுகாயம்

Update: 2022-09-15 19:00 GMT

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார். மேலும் அவருடைய உறவினர் படுகாயம் அடைந்தார்.

களிமண் பார லாரி

கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து கேரள மாநிலத்துக்கு களிமண் பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தை கடந்தபோது, லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதனால் தொப்பூர் போலீஸ் குடியிருப்பு பிரிவு சாலையை மோட்டார் சைக்கிளில் கடக்க சாலையோரம் நின்ற 2 பேர் மீது மோதியது. மேலும் நிற்காமல் சென்ற லாரி, எதிர்திசையில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடியவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை

விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர் தர்மபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி ரத்தினம் (வயது 55) என்பதும், படுகாயம் அடைந்தவர் இவருடைய உறவினரான ஜருகு கருப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த கோவிந்தன் (40) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விபத்தில் பலியான ரத்தினம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய களிமண் பார டிரைவரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்