இரும்பு உருக்கு ஆலையில் சிலிண்டர் வெடித்து வடமாநில தொழிலாளி பலி
சேவூர் அருகே கானூரில் இரும்பு உருக்கு ஆலையில் சிலிண்டர் வெடித்ததில் வட மாநில தொழிலாளி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேவூர் அருகே கானூரில் இரும்பு உருக்கு ஆலையில் சிலிண்டர் வெடித்ததில் வட மாநில தொழிலாளி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இரும்பு உருக்காலை
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே கானூரில் இரும்பு உருக்காலை 17 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஆலை கடந்த 2008-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பழைய இரும்புகளை அரைத்து புதிய ஸ்டீல் பார்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் 180 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த ஊழியர்கள் ஆவார்கள். இந்த தொழிலாளர்கள் அனைவரும் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலி
இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல நிறுவனம் இயங்க தொடங்கியது. தொழிலாளர்கள் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரும்பு உருக்காலையில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் உத்தரபிரதேச மாநிலம் சித்திவிலேஜ் பகுதியை சேர்ந்த ராம்விலாஸ் மகன் ராஜேஷ் (வயது 29) கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வடமாநில தொழிலாளிகள் தஷ்கர்த்ஜாஹோன் (20) மற்றும் பிரதீப் (22) ஆகிய 2 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பலியான ராஜேஷ் கடந்த 8 நாட்களாக தான் இங்கு வேலை செய்து வந்துள்ளார். மேலும் விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் வந்து பார்வையிட்டார்.
இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.