அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் தலைமையில் போதைப்பொருட்கள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு
அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் தலைமையில் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்த உறுதிமொழியை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஏற்றனர்.;
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் தலைமையில் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பள்ளி மாணவ- மாணவிகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏற்றுக்கொண்டனர்.
சிறந்த சமுதாயத்தை உருவாக்க...
முன்னதாக அமைச்சர் பொன்முடி பேசுகையில், இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தேவையில்லாமல் இப்பழக்கத்திற்கு ஆளாகாமலும் மற்றவர்கள் ஆளாவதையும் தடுத்திட முடியும். ஒவ்வொரு மாணவர்களும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் இருந்து பள்ளி- கல்லூரி படிப்பை படித்து வருகின்றனர். தங்கள் கிராமப்புற பகுதிகளில் போதைப்பொருட்கள் நடமாட்டம் மற்றும் பயன்படுத்துவோர் குறித்த தகவல் அறிந்தால் உடனடியாக காவல்துறையின் தொலைபேசி எண்ணில் புகார் தெரிவியுங்கள். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும்.
ஒவ்வொரு மாணவரும் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். நாம் நன்றாக இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ளவர்களும் நன்றாக இருந்திடும் வகையில் மாணவச்செல்வங்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என்றார்.
ஒத்துழைப்பு
நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், இன்று நாம் போதைப்பொருட்களை தடுப்பது குறித்த உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் போதைப்பொருட்களே இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு சார்ந்த அலுவலர்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். அதுதான் நம்முடைய உறுதிமொழி ஆகும். எந்தவொரு காலகட்டத்திலும் போதைப்பொருட்கள் கடத்துவதற்கோ, விற்பனை செய்வதற்கோ, மக்கள் பயன்பாட்டிற்கு வழிவகுக்கின்ற யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்போது மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் நூறு சதவீதம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டு செயல்படுவோம் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.