ஏ.சி. எந்திரத்தில் மின்கசிவு: தீயில் உடல் கருகி தொழில் அதிபர் பலி

சென்னை சூளைமேட்டில் ஏ.சி. எந்திரத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தொழில் அதிபர் சுரேஷ்குமார் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-12-16 00:10 GMT

சென்னை,

சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 52). தொழில் அதிபரான இவர், சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தன்னுடைய மனைவி எஸ்தர், மகன் ஸ்டீபன்ராஜ் மற்றும் மருமகள் சுஜிதா ஆகியோருடன் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

சுரேஷ்குமாரின் மருமகள் சுஜிதா கர்ப்பமாக இருந்தார். எனவே வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஜிதாவை கவனித்து கொள்ள கணவர் ஸ்டீபன் ராஜ் மற்றும் அவரது தாய் எஸ்தர் இருவரும் ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருந்தனர்.

இதனால் வீட்டின் 2-வது தளத்தில் சுரேஷ்குமார் மட்டும் நேற்று முன்தினம் இரவு தனியாக இருந்தார். நேற்று காலை சுரேஷ்குமார் வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய கரும்புகையை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடல் கருகி பலி

தகவலின் பேரில் விரைந்து வந்த சூளைமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வீட்டில் சென்று பார்த்தபோது அறை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தீ விபத்தில் சுரேஷ்குமார் உடல் கருகி பரிதாபமாக இறந்துவிட்டது தெரிந்தது. போலீசார், பலியான சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மின்கசிவால் தீ விபத்து

இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர், முதல் கட்ட விசாரணையில் சுரேஷ் குமார் வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சுரேஷ் குமார் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் மள மளவென பரவிய தீயில் இருந்து தப்பிக்க முடியாமல் இறந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்தில் தொழில் அதிபர் உயிரிழந்த சம்பவம் சூளைமேடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்