பாபநாசம் வனச்சோதனை சாவடி திடீர் மூடல்; பக்தர்கள் போராட்டத்தால் பரபரப்பு

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் வாகனங்களில் வந்து குவிந்ததால் பாபநாசம் வனச்சோதனை சாவடி திடீரென மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-12 23:18 GMT

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 16-ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் கோவிலில் தங்க வருகிற 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அன்றைய தினங்களில் அரசு பஸ்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்படும், தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தது.

இதுதவிர பக்தர்கள் நேற்று மாலை 5 மணி வரையும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி வரையும் உடமைகள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்காக தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி நேற்று காலை முதலே பக்தர்கள் வாகனங்களில் சொரிமுத்து அய்யனார் கோவில் நோக்கி வரத்தொடங்கினர். அப்போது பாபநாசம் வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் பக்தர்களின் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து, மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பக்தர்கள் குடில் அமைப்பதற்காக கம்புகள் உள்ளிட்டவற்றை கீழே இருந்து கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவற்றையும் பறிமுதல் செய்தனர்.

நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் கோவிலில் அதிகளவில் வாகனங்கள் குவிந்துள்ளதாக கூறி பாபநாசம் வனச்சோதனை சாவடியை வனத்துறையினர் திடீரென மூடினர். இதனால் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் காத்திருந்த பக்தர்கள் சோதனை சாவடி முன்பு தர்ணாவில் ஈடுபட்டு, வனத்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த அம்பை துைண போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் பொருட்களை மேலே கொண்டு சென்று வைத்து விட்டு திரும்புமாறு பக்தர்களிடம் அறிவுறுத்தினர். அதை பக்தர்கள் ஏற்றதால் சோதனை சாவடி திறக்கப்பட்டு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்