பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் தங்கசங்கிலி 'அபேஸ்'

சத்திரப்பட்டி அருகே, பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் தங்க சங்கிலியை ‘அபேஸ்’ செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-09-27 16:53 GMT

டீக்கடைக்காரர் மனைவி

சத்திரப்பட்டி அருகே உள்ள விருப்பாச்சியை சேர்ந்தவர் வாசு. இவர், அதேபகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி முருகேஸ்வரி (வயது 50. நேற்று வாசு, டீக்கடையில் இருந்தார். கடையின் பின்புறத்தில் உள்ள வீட்டில் முருகேஸ்வரியும், அவரது மகன் ராகுலும் (26) இருந்தனர்.

அப்போது ஜோதிடம் பார்ப்பதாக கூறி, 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்ற அவர்கள் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

மேலும் பரிகார பூஜையில் வைப்பதற்கு தங்கநகையை கழற்றி கொடுங்கள் என்று முருகேஸ்வரியிடம் அவர்கள் கேட்டனர். இதனை நம்பிய அவர், தனது 2 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்தார்.

தங்க சங்கிலி 'அபேஸ்'

சிறிது நேரம் பூஜை செய்வதுபோல் நடித்த அவர்கள், அருகே உள்ள கோவிலில் வைத்து பூஜை செய்து விட்டு வருவதாக கூறி சங்கிலியை எடுத்து சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை. தங்க சங்கிலியோடு மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு புறப்பட்டனர். ஆனால் அவர்கள் தெருமுனையில் உள்ள கோவிலில் நிற்காமல் வேகமாக அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அதன்பிறகு தான் முருகேஸ்வரி ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் முருகேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் முருகேஸ்வரியின் தங்க சங்கிலியை 'அபேஸ்' செய்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்