ஆவின் பால் வகைகள் எந்தவித தங்குதடையுமின்றி வினியோகம்- மேலாண்மை இயக்குனர் தகவல்
ஆவின் நிறுவனம் எல்லா காலக்கட்டங்களிலும் பொது மக்களின் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் பச்சை உறை பால் விற்பனையை வரும் 25 ஆம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆவின் நிறுவனம் இது தொடர்பாக அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நாளொன்றுக்கு 14.50 லட்சம் லிட்டர் பால், ரூ. 1 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.
பொது மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா நிறம்), சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) மற்றும் நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) விற்பினை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும், அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் சென்னையில் விட்டம் 'ஏ' மற்றும் 'டி' செறிவூட்டப்பட்ட 'டிலைட்' பால் (ஊதா நிற பால் பாக்கெட்) கடந்த மே மாதம் 9-ந்தேதி அறிமுகம் செய்யப்பட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஆவின் நிறுவனம் எல்லா காலக்கட்டங்களிலும் பொது மக்களின் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எந்தவித தங்குதடையுமின்றி வினியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.