ஆடிகிருத்திகை: வடபழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

இன்று இரவு 11 மணி வரை வடபழனி முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-07-23 09:01 GMT

சென்னை,

சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படும்.இந்தாண்டு ஆடி கிருத்திகை சிறப்பு தரிசனம் அதிகாலை 5 மணி முதல் தொடங்கியது. நண்பகல் 12 மணி வரை, மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

இன்று இரவு 11 மணி வரை வடபழனி முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வடபழனி முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமானோர் முருகனை தரிசிக்க வந்திருந்தனர்.

பால்குடம் நேர்த்திக்கடன் ஊர்வலமும் நடந்தது. இதனால் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குடி நீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டன. அலகு குத்தி வரும் பக்தர்கள், மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ரூ.50 தரிசன கட்டணத்தில் பக்தர்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட வரிசையில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்றனர். பக்தர்களுக்காக `கார் பார்க்கிங்' வசதி, வள்ளி திருமண மண்டபம் எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்