திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா: ஆர்.டி.ஓ. தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது

Update: 2023-08-01 06:26 GMT

திருத்தணி, 

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா வருகிற 7-ந்தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆர்.டி.ஓ., தீபா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் ஆர்.டி.ஒ. தீபா தெரிவித்ததாவது, ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி குடிநீரில் குளோரின் கலந்து வினியோகம் செய்ய வேண்டும். பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதார வசதிகள் செய்து தரவேண்டும். மலைக்கோவில் பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், சன்னதி தெரு, படவேட்டம்மன் கோவில் தெரு, சரவணப் பொய்கை திருக்குளம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

போக்குவரத்து துறை சார்பாக 240 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதுகாப்பு பணியில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, தாசில்தார் மதன், நகராட்சி ஆணையர் அருள், இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் மற்றும் போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டம் நடைபெறுவது குறித்து அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்காததால் மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ரெயில்வேத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்