வேப்பமர காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
காட்டுமன்னார்கோவில் வேப்பமர காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் உடையார்குடி வடக்கு வீதியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர், சுயம்பு வேப்பமர காளியம்மன்கோவில் நேற்று 10-ம் ஆண்டு ஆடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 13-ந் தேதி கோவிலில் சக்தி கரகம் எடுத்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி விழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து வேப்பமர காளியம்மனுக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை நடைபெற்று சக்தி கரகத்துடன் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் பெண்கள் பால்குடத்தை தலையில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.