ஆதார் எண்ணை இணைக்கும் பணி 66 சதவீதம் நிறைவு
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 66 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 66 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
66 சதவீதம் பணி நிறைவு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தொடங்கியது. இதுவரை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 66 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 29 ஆயிரத்து 139 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 66 சதவீதம் என்பது 6 லட்சத்து 78 ஆயிரத்து 370 வாக்காளர்கள் மட்டுமே தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.
ஆதார் எண்ணை இணைக்கலாம்
வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளவர்கள் தன்னார்வத்துடன் தாமாகவே முன் வந்து தங்களது ஆதார் எண்ணை இணையதளத்தின் மூலமாக படிவம் 6 பி-யை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைக்கலாம்.
மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு நேரடியாக வரும் போது படிவம் 6 பி-யை பூர்த்தி செய்து வழங்கியும் இணைக்கலாம். அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
18 வயதானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். எனவே திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தன்னார்வத்துடன் தாமாகவே முன்வந்து ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.