தமிழகத்தில் இதுவரை 1.66 கோடி பேரின் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு

தமிழகத்தில் இதுவரை 1.66 கோடி பேரின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

Update: 2022-09-02 00:01 GMT

சென்னை,

இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள், கடந்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதியன்று தொடங்கியது. இந்த பணியை அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்தில் முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் கடந்த மாதம் ஆலோசனை நடத்தியது. இந்தநிலையில் தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை வாக்காளர்கள் இணைத்து வருவது குறித்த தரவுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.

1.66 கோடி பேர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர் தங்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். இது 26.78 சதவீதமாகும்' என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

68 ஆயிரம் அலுவலர்கள்

செல்போனில் 'பிளே ஸ்டோர்'-க்கு சென்று 'வோட்டர் ஹெல்ப் லைன்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம். ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதி 'என்.வி.எஸ்.பி.' என்ற இணையதளத்திலும் தரப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் பணியாற்றி கொண்டிருக்கின்றனர். இவர்கள் வீடு வீடாக சென்று பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த பணிகளுக்காக அவர்களுக்கு மாதம் ரூ.600 என்ற அளவில் ஆண்டுக்கு ரூ.7,200 தொகை வழங்கப்படுகிறது. சிறப்பு முகாம்கள் நடக்கும்போது ஆயிரம் ரூபாய் தரப்படும். தற்போது ஆதார் எண்ணை இணைக்கும் பணியையும் அவர்கள் சேர்த்து கவனிப்பார்கள்.

விழிப்புணர்வு

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த இதுவரை 5 வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 2 வீடியோக்கள் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்களுக்கும், 3 வீடியோக்கள் வாக்காளர்களுக்குமானதாகும்.

ஆதார் எண்ணை இணைப்பதால், எதிர்காலத்தில் இந்தியாவில் எந்த இடத்திற்கும் இடம் மாறி சென்றாலும் அந்த வாக்காளர் எளிதாக தனது பெயரை அந்த இடத்தில் உள்ள வாக்காளர் பட்டியலுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்