64 சதவீதம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைப்பு
நீலகிரி மாவட்டத்தில் 64 சதவீதம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது என மின்வாரிய அதிகாரி தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 64 சதவீதம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது என மின்வாரிய அதிகாரி தெரிவித்தார்.
ஆதார் எண்
தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் கடந்த நவம்பர் மாத இறுதியில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே குறைந்த கால அவகாசம் மட்டும் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். எனவே, கடந்த மாதம் 31-ந் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
ஆனாலும், பல்வேறு இடங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது இணையதள பிரச்சினை காரணமாக கால தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து தற்போது ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட மின்வாரிய அதிகாரி வில்வராஜ் கூறியதாவது:-
64 சதவீதம் இணைப்பு
நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 991 மின் இணைப்புகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 383 மின் இணைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இதுவரை 63.65 சதவீதம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இந்த மாதம் 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் இணைப்பு பணி நடைபெறுகிறது. ஆன்லைன் மூலமும் இணைத்துக்கொள்ளலாம். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மற்றும் கிராமப்புறங்களில் வருகிற நாட்களில் சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்து உள்ளோம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.