சென்னை: சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை
பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பிரவீனும் ஷர்மியும் திருமணம் செய்து கொண்டனர்.;
சென்னை,
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடியாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஷர்மியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரவீனும் ஷர்மியும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பிரவீன் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு வந்தபோது, ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் வழிமறித்து பிரவீன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனை கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் படுகாயமடைந்த பிரவீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பிரவீன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
சென்னையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் சகோதரர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.