கோவில், ஆலயங்களுக்கு வந்த பெண்களிடம் நகை திருடிய வாலிபர் கைது
உவரி கோவில், ஆலயங்களுக்கு வந்த பெண்களிடம் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரியில் சுயம்புலிங்க சுவாமி கோவில், அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு விழா காலங்களில் வரும் பொதுமக்கள் தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள திறந்த வெளிகளில் இரவில் தங்குவது வழக்கம். அவ்வாறு தங்கும் பெண்கள் தூங்கும்போது கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை மர்மநபர் திருடிச் செல்வதாக உவரி போலீசில் அடிக்கடி புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். மேலும் வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் ஆலோசனையின்பேரில் உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், நதியா மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் சுயம்புலிங்க சுவாமி கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவா் திசையன்விளை அருகே உள்ள மருதநாச்சிவிளையைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து, 8 பவுன் நகைகளை மீட்டனர்.
மேலும், கைதான காா்த்திக் பகல் நேரத்தில் திசையன்விளை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்து வெட்டிக் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். முக்கிய விழா நாட்களில் உவரியில் உள்ள கோவில், ஆலயங்களில் இரவில் தங்கி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.