தேனி அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி வாலிபர் பலி

தேனி அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.

Update: 2023-05-24 21:00 GMT

தேனி அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.

முல்லைப்பெரியாறு

தேனி அல்லிநகரத்தில் உள்ள கோட்டைக்களம் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தேனியில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சுரேஷ் (வயது 30). இவர் தேனியில் உள்ள ஒரு டிஜிட்டல் பிளக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது நண்பர்கள் 2 பேருடன் தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள முல்லைப்பெரியாறு தடுப்பணைக்கு குளிக்கச் சென்றார். அங்கு அவர்கள் 3 பேரும் ஆற்றில் குளித்தனர். அப்போது நண்பர்கள் 2 பேரும் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி வருவதாக கூறிவிட்டு கடைக்கு சென்றனர்.

ஆற்றில் மூழ்கி பலி

பின்னர் அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது சுரேசை அங்கு காணவில்லை. தண்ணீருக்குள் இறங்கி தேடியபோது அவர் நீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. பின்னர் அவருடைய உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்த நண்பர்கள் இருவரும், இதுகுறித்து சுரேசின் தாயார் ஈஸ்வரிக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்து தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், சுரேஷ் ஆற்றில் மூழ்கி இறந்துபோனது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்