காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மச்சாவு
வேட்டவலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்டவலம்
வேட்டவலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம்
வேட்டவலம் அருகே வேளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 23), விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி புனிதா (20) இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.
அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்ற புனிதா குழந்தையுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் மோகன் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க நேற்று மாலை வந்தார்.
அப்போது புனிதாவின் தந்தை பாண்டுரங்கன் மோகன் மற்றும் புனிதா இருவரும் சாப்பிடுவதற்காக பானி பூரி வாங்கிக் கொடுத்து விட்டு சாப்பிடுமாறு கூறிவிட்டு நிலத்திற்கு சென்று விட்டார்.
மர்மச்சாவு
இதனையடுத்து வீட்டின் அருகே உள்ள மாலா என்பவர் புனிதா மயங்கிய நிலையில் கிடப்பதாக பாண்டுரங்கனுக்கு தகவலை தெரிவித்தார். மேலும் வீட்டில் இருந்த மோகன் வெளியே சென்று விட்டார்.
பாண்டுரங்கன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது புனிதா கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று புனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
மேலும் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து பாண்டுரங்கன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து புனிதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமாகி ஒரு ஆண்டில் புனிதா இறந்ததால் திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.
கணவர் கைது
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் மோகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.